பெங்களூரு: பாடப் புத்தகங்கள் மூலம் குழந்தைகளின் மனதை மாசுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூருவில் நேற்று (திங்கள்கிழமை) நடந்த எழுத்தாளர்களுடனான சந்திப்பில் சித்தராமையா இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளும் கலந்து கொண்டன.
அந்த சந்திப்பின்போது சித்தராமையா பேசியதாவது: கர்நாடகாவின் மதநல்லிணக்கம், மதச்சார்பின்மையை சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை. ஆகையால் பள்ளிப் புத்தகங்கள் மூலம் குழந்தைகள் மனதை மாசுபடுத்துவது என்பது அனுமதிக்கப்படாது. வெறுப்பு அரசியலைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம். மக்கள் மனங்களில் அதன் நிமித்தமாக உருவாக்கப்பட்ட அச்சம் அப்புறப்படுத்தப்படும்.
இந்த மண்ணின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைக்கும் பாஜகவை எதிர்த்து வலுவான குரல் கொடுக்கும் எழுத்தாளர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கல்வி ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் கல்வியாளர்களுடன் ஆலோசித்து பாடத்திட்டத்தில் குழந்தைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதேபோல், கன்னட எழுத்தாளர்கள், விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட போலி வழக்குகள் திரும்பப்பெறப்படும். கல்வித் துறையை புதிய கல்விக் கொள்கை அணுகாதபடி பார்த்துக் கொள்ளப்படும். கலாச்சார காவலர்கள் என்ற போர்வையில் எழுத்தாளர்களை அச்சுறுத்துவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். இது தொடர்பாக மாநில டிஜிபிக்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்தப்படும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.