பெங்களூரு: மைசூரு அருகே வேன் மீது பேருந்து மோதிய பயங்கர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் டி.நர்சிபுரா - கொள்ளேகால் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பயணித்த வேன் மீது தனியார் பேருந்து வேகமாக மோதியது. இந்த விபத்தில் 2 வாகனங்களும் உருக்குலைந்து கடுமையாக சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த மைசூரு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த ஓட்டுநர் ஆதித்யா (26) உட்பட 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட 3 பேர் மைசூரு அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குருபருஹள்ளி போலீஸார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் விபத்து நிகழ்ந்த போது பதிவான காட்சியை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். விசாரணையில் மைசூருவில் இருந்து மலை மாதேஷ்வரா சென்று திரும்பிய வேன் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘‘மைசூரு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப் படும்'' என்றார்.
பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.