புதுடெல்லி: டெல்லியில் அமைந்துள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மின்சாரம், தண்ணீர் பயன்பாட்டை குறைக்கும் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. இந்த கட்டிடத்தின் 20 முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. முக்கோண வடிவம்
புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் அமைந்துள்ள நிலம் முக்கோண வடிவில் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். வெவ்வேறு மதங்களில் உள்ள புனித வடிவியலுக்கு அங்கீகாரம் வழங்குவதாக இந்த வடிவம் அமைந்துள்ளது என இந்த கட்டிடத்தை வடிவமைத்த கட்டிடக்கலை வல்லுநர் விமல் படேல் தெரிவித்துள்ளார்.
2. கட்டுமான பரப்பு
இந்தக் கட்டிடம் 4 தளங்களையும் 64,500 சதுர மீட்டர் பரப்பளவுடையது. இதில் அமைந்துள்ள மக்களவை அரங்கில் 888 இருக்கைகள் உள்ளன. தேவைப்பட்டால் 1,272 இருக்கைகள் வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.
3. நுழைவாயில்கள்
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மக்களவைத் தலைவர் மற்றும் பிரதமருக்காக என மூன்று பக்கங்களில் 3 நுழைவாயில்கள் அமைந்துள்ளன. நாடாளுமன்றத்தை பார்வையிட வரும் பொதுமக்களுக்கான நுழைவாயில் நாடாளுமன்ற சாலையில் பிடிஐ கட்டிடத்துக்கு அருகில் அமையும்.
4. சுற்றுச்சூழலுக்கு சாதகமானது
பசுமை கட்டுமான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால் பழைய கட்டிடத்துடன் ஒப்பிடும்போது மின்சார நுகர்வு 30 சதவீதம் குறையும். மழைநீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 150 ஆண்டுகளுக்கு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5. மக்களவை கருப்பொருள்
புதிய மக்களவை அரங்கு மயில் கருப்பொருளைக் கொண்டிருக்கிறது. இதன்சுவர்கள், மேற்கூரை ஆகியவற்றில்மயிலின் இறகுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவை அரங்கு தாமரையை கருப்பொருளாகக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
6. மாநிலங்களவை
மாநிலங்களையில் மொத்தம் 384 இருக்கைகள் இடம்பெற்றிருக்கும். பழைய கட்டிடத்தில் உள்ள மாநிலங்களவையில் 250 இருக்கைகள் மட்டுமே உள்ளன. வரும் காலத்தில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் அதிகரிக் கும் உறுப்பினர்கள் அமர இரு அவை களிலும் கூடுதல் இருக்கைகள் பொருத் தப்பட்டுள்ளன.
7. நிலநடுக்கத்தைத் தாங்கும்
நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள மண்ட லத்தில் டெல்லி அமைந்துள்ளதால் நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது.
8. அரசமைப்பு அரங்கு
புதிய கட்டிடத்தில் அரசமைப்பு அரங்கு இருக்கும். அங்கு இந்திய ஜனநாயக பயணம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்.
9. எம்.பி.க்களுக்கான வசதிகள்
எம்.பி.க்களுக்கு ஓய்வறைகள், உணவு அருந்தும் அரங்கு, நூலகம் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும். ஆல மரத்துடன் கூடிய மத்திய முற்றத்தில் இருந்து கட்டிடம் தொடங்கும்.
10. அலுவலக இடம்
புதிய கட்டிடத்தில் 6 புதிய குழு அறைகள் இருக்கும். பழைய கட்டிடத்தில் 3 அறைகள் மட்டுமே உள்ளன. அமைச்சர்களின் அலுவலகங்கள் செயல்பட 92 அறைகள் இடம்பெற்றிருக்கும்.
11. நாடு முழுவதிலுமிருந்து பொருட்கள்
இந்த கட்டிடத்தின் உள் மற்றும்வெளிப்புறங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டன. ராஜஸ்தானின் சார்மதுராவிலிருந்து மணல்கல், ஜெய்சல்மாரை அடுத்த லகா கிராமத்திலிருந்து கிரானைட்கற்கள் கொண்டுவரப் பட்டன. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மரங்கள் மகாராஷ்டிராவின் நாக்பூரிலிருந்து தருவிக்கப்பட்டது. மும்பையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் தலைமையில் மரத்தாலான அலங்கார பொருட்கள் செய்யப்பட்டன.
12. காந்தி சிலை
நாடாளுமன்ற வளாகத்தின் முதன்மை நுழைவாயில் அருகே 16 அடி உயர வெண்கல காந்தி சிலை 1993-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த சிலை இப்போது இடம் மாற்றப்பட்டு, புதிய மற்றும் பழைய நாடாளுமன்றத்துக்கு நடுவில் நிறுவப்பட்டுள்ளது.
13. தேசிய சின்னம்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் 9,500 கிலோ எடை மற்றும் 6.5 மீட்டர் உயரம் கொண்ட வெண்கலத்தினாலான சிங்கங்களை உள்ளடக்கிய தேசிய சின்னம் இடம்பெற்றுள்ளது. நுழைவுவாயிலில் அசோக சக்கரம் மற்றும் சத்யமேவ ஜெயதே பொறிக்கப்பட்டுள்ளன.
14. கட்டிடத்தின் செலவு
புதிய கட்டிடத்துக்கான செலவு ரூ.971 கோடி என்று கூறப்படுகிறது.கட்டிடம் கட்டி முடிக்கும்போது இந்த செலவு ரூ.1,200 கோடியாக ஆக அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
15. தங்க செங்கோல்
நாடு சுதந்திரம் அடைந்தபோது பிரிட்டிஷாரிடமிருந்து ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படுவதை குறிக்கும் வகையில் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனம் இதை வழங்கினார். இந்த செங்கோல் புதிய கட்டிடத்தில் மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.
16. தொழிலாளர்களுக்கு அங்கீகாரம்
இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட 60 ஆயிரம் தொழிலாளர்களின் பங்களிப்பை பறைசாற்ற ஒரு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
17. டிஜிட்டல் மயம்
புதிய கட்டிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. எனவே, அவை நடவடிக்கைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும். காகிதங்களுக்கு பதில் டேப்லெட்ஸ், ஐபாட்கள் பயன்படுத்தப்படும்.
18. காட்சியகங்கள்
அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி வகைகள், மட்பாண்டங்கள் ‘ஷில்ப்’ என்ற காட்சியகம் மூலம் காட்சிப்படுத்தப்படும். ‘ஸ்தபாத்யா’ காட்சியகம் மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நினைவுச் சின்ன மாதிரிகள் காட்சிப்படுத்தப்படும்.
19. வாஸ்து சாஸ்திரம்
அனைத்து நுழைவாயில்களிலும் இந்திய கலாச்சாரம் மற்றும் வாஸ்துசாஸ்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில் குதிரை, கழுகு உள்ளிட்ட மங்களகரமான விலங்குகளின் சிலைகள் காட்சிப்படுத்தப்படும்.
20. பொழுதுபோக்கில் இருந்து...
பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு எதிரில் 9.5 ஏக்கர் பரப்பளவில் இருந்த இடம் முதலில் பொழுதுபோக்கு பூங்காவுக்காக டெல்லி மாநகர வளர்ச்சி ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது. பின் னர் மார்ச் 2020-ம் ஆண்டு இந்த இடத்தை புதிய நாடாளுமன்றம் கட்டு வதற்காக ஒதுக்கி டெல்லி மாநகர வளர்ச்சி ஆணையம் உத்தரவிட்டது.