போராட்டத்தில் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 
இந்தியா

மல்யுத்த வீராங்கனைகள் மீது டெல்லி காவல் துறை வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதிய பாராளுமன்றம் நோக்கி அணிவகுப்பு நடத்த முற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்சி மாலிக் உட்பட மல்யுத்த வீரர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

“பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்சி மாலிக் மற்றும் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் ஜந்தர் மந்தருக்கு போராட்டம் நடத்த மீண்டும் வந்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்” என டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி அணிவகுப்பு நடத்திய போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த சில மணி நேரங்களில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வினேஷ் போகத், ட்வீட் செய்துள்ளார்.

“பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய 7 நாட்கள் ஆனது. ஆனால், அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது 7 மணி நேரத்திற்குள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாடு சர்வாதிகாரத்தின் பிடியில் உள்ளதா? அரசு தனது வீரர்களை எப்படி நடத்துகிறது என்பதை உலகமே பார்த்துக் கொண்டுள்ளது. புதிய வரலாறு எழுதப்படுகிறது” என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

“போலீஸார் என்னை கஸ்டடியில் வைத்துள்ளனர். என்னிடம் எதுவும் சொல்லவில்லை. நான் குற்றம் செய்துள்ளேனா? பிரிஜ் பூஷன் தான் சிறையில் இருக்க வேண்டும். நான் சிறையில் இருக்க வேண்டும்?” என பஜ்ரங் பூனியா தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி இந்தியாவுக்காக ஒலிம்பிக் மற்றும் உலக மல்யுத்த போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்சி மாலிக் மற்றும் பலர் அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT