இந்தியா

வம்சாவளி அரசியலை நிலைநிறுத்தவே புதிய நாடாளுமன்ற திறப்பை புறக்கணிக்கிறது - காங்கிரஸ் மீது ஜே.பி. நட்டா விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வம்சாவளி அரசியலை நிலைநிறுத்தவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவை புறக்கணி்ப்பு செய்ய முடிவெடுத்துள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: பதவியேற்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள முடிவு ஜனநாயகத்தின் மீது அவர்களுக்கு எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில், அவர்களின் ஒரே நோக்கம் வம்சாவளி அரசியலை நிலைநிறுத்துவதே ஆகும்.

அத்தகைய அணுகுமுறை அரசியலமைப்பை உருவாக்கியவர்களை அவமதிக்கும் செயலாகும்.

எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ள கட்சிகள் இந்த கூற்றுகளை மனதில் நிறுத்தி தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக, எளிய பின்னணியில் இருந்து வந்த பிரதமர் மீது மக்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளதை நேரு-காந்தி வம்சாவளி கட்சியான காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. வம்சாவளி மனநிலை அவர்களை தர்க்கரீதியான சிந்தனையிலிருந்து தடுக்கிறது.

முடியாட்சி முறையை பின்பற்றும் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் அரசியலமைப்பில் உள்ளகுடியரசு மற்றும் ஜனநாயக கொள்கைகளுடன் முரண்படுகின்றன. வம்சாவளி கட்சிகளின்செயல்பாடுகளை வாக்காளர்கள் தொடர்ந்து கவனித்து வருவதால் வரும் தேர்தல்களில் மக்கள் சரியான பாடத்தை அவர்களுக்கு புகட்டுவார்கள்.

இவ்வாறு பாஜக தலைவர் நட்டா கூறினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. அதேசமயம், 25 கட்சிகள் இந்த விழாவில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) சாராத 7 கட்சிகளும் அடங்கும்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார்.

SCROLL FOR NEXT