புதுடெல்லி: பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தாங்கள் கேட்கும் 9 கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்று மே 30-ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பிரதமரிடம் 9 கேள்விகளை கேட்க காங்கிரஸ் விரும்புகிறது.
1. பொருளாதாரம்: ஏன் இந்தியாவில் பணவீக்கமும், வேலையின்மையும் அதிகமாக உள்ளது? பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறியது ஏன்? பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், பொது சொத்துகள் பிரதமரின் நண்பர்களுக்கு தாரைவார்க்கப்படுவது ஏன்?
2. விவசாயம்: மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை ரத்துசெய்யும்போது விவசாயிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏன் மதிக்கப்படவில்லை? குறைந்தபட்ச ஆதரவுவிலை ஏன் சட்டப்பூர்வமாக்கப்பட வில்லை? விவசாயிகள் வருமானம் ஏன் இரட்டிப்பாகவில்லை? என்ற கேள்விகளை காங்கிரஸ் எழுப்பியுள்ளது.
இவைதவிர, 3.ஊழல், 4.சீனாவும் தேசிய பாதுகாப்பும், 5.சமூக நல்லிணக்கம், 6.சமூக நீதி, 7.ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி, 8.நலத்திட்டங்கள், 9.கரோனா கால தவறான நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் காங்கிரஸ் எழுப்பியுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பிரதமர் மவுனம் கலைத்து பதில் கூற வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.