புதுடெல்லி: சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 76-வது உலக சுகாதார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: சர்வதேச அளவில் 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலத்தில் காச நோய் பாதிப்பு 10 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.
இதே காலத்தில் இந்தியாவில் 13 சதவீதம் அளவுக்கு காசநோய் பாதிப்பு குறைக்கப்பட்டு உள்ளது. வரும் 2025-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இதற்காக காசநோய் பரவலை தடுப்பது, முன்கூட்டியே நோயின் பாதிப்பை கண்டறிவது, தரமான சிகிச்சை அளிப்பது ஆகிய நடைமுறைகளை இந்திய அரசு கண்டிப்புடன் பின்பற்றி வருகிறது. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் சுதாதார மையங்களில் இதற்காக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உலகளாவிய அளவில் ஏற்படும் சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நோய்க்கு எல்லைகள் கிடையாது. எனவே கூட்டு ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கூட்டு ஆராய்ச்சி மூலம் குறைந்த விலையில் தடுப்பூசி, மருந்துகளை மக்களுக்கு வழங்க முடியும். தடுப்பூசி, சிகிச்சை மற்றும் நோயை கண்டறியும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதில் அனைத்து நாடுகளிடையே ஒருங்கிணைப்பு அவசியமாகும். இவ்வாறு அமைச்சர் மாண்டவியா பேசினார்.