லக்னோ: வாகனங்களின் தகுதி பரிசோதனைகளை எந்த மாவட்டத்திலும் மேற்கொள்ளும் வகையில் மோட்டார் வாகன விதிமுறைகளில் உத்தர பிரதேச மாநில அரசு திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது.
வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் முக்கியம். தனியார் வாகனங்களுக்கு முதலில் 15 ஆண்டுகளும், அதன்பின் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் தகுதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. வர்த்தக வாகனங்களாக இருந்தால், புதிய வாகனங்களுக்கு 2 ஆண்டுகளும் அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கும் வகையில் தகுதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
வாகனங்கள் எந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டதோ, அதே மாவட்டத்தில்தான் தகுதிச் சான்றிதழ்களை பெற வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. இனி எந்த மாவட்டத்திலும், தகுதிச் சான்றிதழ்களை பெறும் வகையில், உத்தர பிரதேச மோட்டார் வாகன விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி உ.பி.யில் ஒருவர்எந்த மாவட்டத்திலும் தனதுவாகனத்தின் தகுதி சான்றிதழுக்குவிண்ணப்பிக்க முடியும். வேறு மாநிலங்களில் வாகனங்கள் இயக்கப்பட்டாலும், குறிப்பிடப்பட்ட ஆணையம் அல்லது உத்தரபிரதேசத்தின் அருகில் உள்ள மாவட்டங்களின் தானியங்கி பரிசோதனை மையம் பதிவு ஆணையமாக இருக்கும்.
வேறுமாவட்டத்தில் வாகனம் பரிசோதிக்கப்பட்டால், ஆய்வு செய்யும் அதிகாரி அதன் அறிக்கையை போக்குவரத்து துறை இணையதளத்தில் அதேநாளில் அல்லது அடுத்த வேலைநாளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
60 நாட்கள் அவகாசம்: வாகனத்தின் தகுதிச் சான்றிதழ் காலாவதியான தேதியிலிருந்து 60 நாட்களுக்குள், அந்த வாகனத்தை அதன் உரிமையாளர் பரிசோதனைக்கு அதற்குரிய கட்டணத்துடன் கொண்டு செல்லலாம். மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின்படி வாகனம் தகுதியுடையதாக இருந்தால், தகுதி சான்றிதழ், பதிவு ஆணையத்தால் 15 நாட்களுக்குள் வழங்கப்படும்.
பரிசோதனையில் வாகனம் தகுதியில்லை என்றால், வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தின் பழுதை சரி செய்து மீண்டும் பரிசோதனைக்கு அதற்குரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த திருத்தத்தில், சில விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளன. வாகனத்தின் அடுத்த பரிசோதனைக்கான தேதியை பதிவு அதிகாரியால் இனி நிர்ணயிக்க முடியாது. அதேபோல் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகிவிட்டால், குறைந்தது ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையும் நீக்கப்பட்டுள்ளது.
தகுதிச் சான்றிதழ் காலாவதியாவதற்கு முன், வாகனம்பரிசோதனைக்கு கொண்டுவரப்படாவிட்டால், அதற்குரிய கட்டணத்தை உரிமையாளர் செலுத்த வேண்டும்.
இவ்வாறு உ.பி.அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.