இஸ்லாமியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும், ஏழை மக்கள் நலன் காக்க ஆணையம் அமைக்கப்படும் என சமாஜ்வாதி கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:
*காவல் துறை பணிகளில் சேர இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்படும்.
*பிற அரசுப் பணிகளிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும்.
*தீவிரவாத தடுப்புச் சட்டங்களில் கைது செய்யப்பட்ட அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை விடுவிக்கப்படுவார்கள்.
*உயர் வகுப்பினருக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க தனி ஆணையம் அமைக்கப்படும்.
*மதக் கலவரங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்படும்.
*குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*மத்தியில் காங், பாஜக அல்லாத சமாஜ்வாதி அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால், இலவசமாக கல்வி, சுகாதார வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
*மகளிர், பிற்படுத்தப்பட்டோர் நலன் காக்க தனித்தனி ஆணையங்கள் அமைக்கப்படும்.
*பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 17 சாதிகள் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படும்.
கல்விக்கு செலவு செய்யப்படும் அளவு அதிகரிக்கப்படும். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் 7% கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
நக்சல் பிரச்சினையை பொருத்தவரை, அவர்களுக்கு எதிராக படை பலத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.