புதுடெல்லி: ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி-7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு வரும் 21-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க, இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டுச் சென்றார். ஹிரோஷிமாவில் அவரை ஜப்பான் பிரதிநிதிகள் வரவேற்றனர். உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உட்பட உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸி. பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் ஆகியோருடன் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி வரும் 22-ம் தேதி பப்புவா நியூ கினிக்கு செல்கிறார். அங்கு இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் (எஃப்ஐபிஐசி) 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வரும் இந்த நேரத்தில் ஜி-7 உச்சி மாநாட்டில் நான் கலந்துகொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பப்புவா நியூ கினியில் நடைபெறும் எஃப்ஐபிஐசி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பை 14 பசிபிக் தீவு நாடுகளும் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.