கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, குஜராத் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து நேற்று உத்தரவிட்டது. மேலும் 20 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்து புறப்பட்ட சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தை நோக்கி வந்தது. அதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் கரசேவகர்கள்.
அப்போது எஸ்-6 பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்தப் பெட்டி முழுவதும் எரிந்ததில், அதில் பயணம் செய்த 59 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் மதக்கலவரம் வெடித்ததில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.
இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான பல்வேறு வழக்குகளை விசாரிக்க சிறப்பு எஸ்ஐடி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதில் முதல் நிகழ்வான கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில், 31 பேர் குற்றவாளிகள் என 2011-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
அதேநேரம், முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மவுலானா உமர்ஜி, கோத்ரா நகராட்சி முன்னாள் தலைவர் முகமது ஹுசைன் கலோடா, முகமது அன்சாரி மற்றும் நனுமியா சவுத்ரி உள்ளிட்ட 63 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, எஸ்ஐடி சார்பிலும் தண்டனை பெற்றவர்கள் சார்பிலும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் ஆனந்த் எஸ் தவே மற்றும் ஜி.ஆர்.உத்வானி ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் குற்றவாளிகளின் மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. 31 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. அதேநேரம் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக (கடுங்காவல்) குறைக்கப்படுகிறது. மேலும் 20 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படு கிறது.
கோத்ரா சம்பவத்தின்போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறிய மாநில அரசும் ரயில்வே துறையும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு அதன் தன்மைக்கேற்ப இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.63 பேர் விடுவிப்பை எதிர்த்தும் குற்றவாளிகளின் தண்டனையை மேலும் அதிகரிக்குமாறும் எஸ்ஐடி வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.