இந்தியா

லே விமான நிலைய ஓடுபாதையில் பழுதாகி நின்றது விமானப்படை விமானம் - பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே விமான நிலைய ஓடு பாதையில், விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் பழுதாகி நின்றது. அதை ஓடுபாதையில் இருந்து அகற்ற முடியாததால், பயணிகள் விமான போக்குவரத்தில் தடை ஏற்பட்டது.

உலகின் மிக உயரமான இடங் களில் அமைந்துள்ள விமான நிலையங்களில், லடாக்கின் லே பகுதியில் உள்ள ‘குஷாக் பகுலா ரிம்போச்சி’விமான நிலையமும் ஒன்று. இங்கு இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் நேற்று காலை தரையிறங்கியது.

அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது ஓடு பாதையின் நடுவே நின்றுவிட்டது. இதனால் மற்ற பயணிகள் விமானங்களின் போக்குவரத்தில் தடை ஏற்பட்டது.

10 விமானங்கள் இயக்கம்: இங்கிருந்து நாள் ஒன்றுக்கு ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 10 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

லேவுக்கு புறப்பட்டு சென்ற விமானங்கள் மற்ற நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. சில விமானங்கள் நகருக்கும், சில விமானங்கள் டெல்லிக்கும் திரும்பின.

சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தின் பழுதை சரிசெய்யும் நடவடிக்கையில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இங்கு இன்றுமுதல் பயணிகள் விமான போக்குவத்து மீண்டும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT