மஜத எம்எல்சி போஜ் கவுடாவுக்கு பால் அபிஷேகம் செய்யும் தொண்டர்கள். 
இந்தியா

சி.டி.ரவியின் தோல்விக்கு காரணமாக இருந்த மஜத பிரமுகருக்கு பால் அபிஷேகம்

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக தேர்தலில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியின் தோல்விக்கு காரணமாக இருந்த மஜத பிரமுகருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பாஜக பொதுச் செயலாளரும், தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி, சிக்கமகளூரு தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் 5-வது முறையாக பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கினார். ஆனால் அவரது 17 ஆண்டு கால நண்பரான எச்.டி.தம்மையாவை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியது.

இந்நிலையில் மஜத எம்எல்சி போஜ் கவுடா தனது அரசியல் எதிரியான சி.டி.ரவியை தோற்கடிக்க திட்டமிட்டார். அதன்படி தனது கட்சி வேட்பாளர் திம்ம செட்டிக்கு ஆதரவு அளிக்காமல், காங்கிரஸ் வேட்பாளர் தம்மையாவுக்கு ஆதரவு தெரிவித்தார். தனது ஆதரவாளர்களை தம்மையாவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனால் சி.டி.ரவி 4 முறை வென்ற சிக்கமகளூருவில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி.தம்மையாவிடம் 5,926 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த போஜ் கவுடா நேற்று தனது தொண்டர்களுக்கு விருந்து பரிமாறினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் சி.டி.ரவியை தோற்கடித்த போஜ் கவுடாவுக்கு வாழ்த்துகளை கூறி பால் அபிஷேகம் செய்தனர்.

SCROLL FOR NEXT