பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் சூழலில் அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வெற்றிக்கு ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காரணம் எனக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஊசலாட்டத்தில் இருந்த கட்சிகளின் முன்னிலை நிலவரம் 1 மணி நேரத்திலேயே ஒரு புள்ளியில் நிலைபெறத் தொடங்கின. பகல் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் 120க்கும் மேற்பட்ட இடங்களிலும் பாஜக 70க்கு அருகிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 என்றளவிலும் முன்னிலை வகிக்கின்றன. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு 113 என்பது பெரும்பான்மை பலம். இந்நிலையில் காங்கிரஸ் 120க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதால் கட்சி அலுவலகத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
இந்தச் சூழலில்தான் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்காக ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில், I'm unstoppable என்ற ஆங்கிலப் பாடல் பின்னணியில் ஒலிக்க ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
என்னை யாரும் நிறுத்தமுடியாது..
என்னை வெல்லமுடியாது..
நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்..
என்ற பாடல் வரிகள் ஒலிக்க ராகுலின் படங்கள் தம்ப்நெயிலில் மாறுகின்றன.
136 நாட்கள் நடந்த யாத்திரை: இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த 2022-ம் ஆண்டு செப். 7ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. அங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் வழியாக 4,080 கிமீ பயணித்து 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கடந்து ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது.
இந்த யாத்திரை முழுவதும் ராகுல் காந்தி 12 பொதுக்கூட்டங்கள், 100க்கும் அதிகமான தெருமுனைக் கூட்டங்கள், 13 பத்திரிகையாளர்கள் சந்திப்பு, 275க்கும் அதிகமான திட்டமிடப்பட்ட நடைபயண உரையாடல்கள், 100 க்கும் அதிகமான தனி உரையாடல்கள் ஆகியவற்றில் பங்கேற்றார்.