தீவிரவாத செயல்களுக்கு நிதி வழங்கிய வழக்கில் ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையத் சலாஹூதீனின் மகன் சையத் ஷாகித் யூசுஃப், தேசியப் புலனாய்வு முகமையால் (என்ஐஏ) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை காஷ்மீர் விவகாரத்தைக் கையாள மத்திய அரசு சிறப்புப் பிரதிநிதியை நியமித்த அடுத்த நாளில் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய என்ஐஏ அதிகாரி, ''ஜம்மு காஷ்மீர் அரசின் வேளாண்மைத் துறையில் பணிபுரிபவர் யூசுஃப். இவரை என்ஐஏ, தீவிரவாத செயல்களுக்கு நிதியளிப்பது குறித்த 2011-ம் ஆண்டு வழக்கில் தடுப்புக் காவலில் எடுத்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் சலாஹுதீனின் வழிகாட்டுதலில் சிரியாவைச் சேர்ந்த குலாம் மொகம்மது யூசுப்புக்கு பணம் அனுப்பியதாகத் தெரியவந்துள்ளது.
இந்தப் பணம் 2011 முதல் 2014 வரை அனுப்பப்பட்டுள்ளது. அத்தொகை காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காகச் செலவழிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குலாம் முகம்மது பட், முகமது சித்திக், குலாம் ஜீலானி லிலூ மற்றும் ஃபரூக் அகமது தாகா ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விட்டனர். முகமது மக்பூல் பண்டிட் மற்றும் அஜாஸ் அஹமது பட் ஆகியோர் தப்பிவிட்டனர்'' என்று தெரிவித்தார்.