இந்தியா

பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது; ஆனால் காரணங்களை பிரதமரிடம் மட்டுமே கூறுவோம்: ஆலோசனைக்குழு

செய்திப்பிரிவு

பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று ஒருவழியாக ஒப்புக் கொண்ட பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவினர், அதற்கானக் காரணங்களை பிரதமரிடம் மட்டுமே கூறுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த 6 மாதங்களில் வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் பெருக்குவதே நோக்கம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் சேர்மன் பிபேக் தேப்ராய் தெரிவித்துள்ளார்.

“பொருளாதார மந்த நிலைக்கு பங்களிப்பு செய்துள்ள பல்வேறு காரணங்கள் பற்றி எங்களிடையே கருத்திசைவு ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்தக் காரணங்களை பிரதமரைத் தவிர வேறு நபர்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவதில்லை” என்றா பிபேக் தேப்ராய்.

“அடுத்த 6 மாதங்களில் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு செல்ல முன்னுரிமை அளிக்க வேண்டிய ஒரு 10 விஷயங்களை கமிட்டி அடையாளம் கண்டுள்ளது” என்றார் பிபேக் தேப்ராய்.

இதில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், வெகுஜனப் பொருளாதாரம் (இன்பார்மல் செக்டார்), ஒருங்கிணைப்பு, நிதிச்சட்டகம், நிதிக்கொள்கை, பொதுச்செலவினம், நிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிர்வாகம், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நுகர்வு வகைமாதிரிகள், உற்பத்தி மற்றும் சமூகத்துறைகள். ஆகியவற்றுக்கு சிறப்புரிமை அளிக்க அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதே போல் வேலைவாய்ப்பு பற்றிய தரவுத்தொகுப்புகள் இல்லை, இதற்காக வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. 2011-ல் தேசிய மாதிரி ஆய்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானது, அதேபோல் 2018-ல் வெளியிடப்படவுள்ளது என்று பிபேக் தேப்ராய் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT