புனே நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இதுவரை 8 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். சம்பவ இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் பார்வையிடுகிறார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மலைக்குன்றுகளில் புதன்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது பாறைகள், கற்கள் அங்கிருந்த வீடுகள் மீது விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் 165 பேர் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 300 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சவுரவ் ராவ் கூறினார்.
நிலச்சரிவில் புதைந்துள்ளவர்களுக்கு பாதிப்பு நேரக்கூடாது என்பதால் மீட்புப்பணி மிக எச்சரிக்கையுடன் நிதானமாக செய்யப்படுகிறது.
ராஜ்நாத் விரைந்தார்:
இந்நிலையில், புனே நிலச்சரிவு பாதிப்பு நிலைமையை நேரில் கண்டறியும்படி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் பிரதமர் உத்தரவிட்டார். பிரதமர் உத்தரவை ஏற்று ராஜ்நாத் சிங் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு விரைந்தார்.
நேற்றிரவு புனே வந்தடைந்த அவர் பலத்த மழை காரணமாக சம்பவ பகுதிக்கு உடனடியாக செல்லவில்லை. இன்று காலை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பவ இடத்திற்கு சென்றார். மீட்புப் பணிகளை அவர் நேரில் பார்வையிடுகிறார்.
முன்னதாக நேற்றிரவு மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவிராஜ் சவான் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.