ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் கண்டி வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து, கடந்த 5-ம் தேதி அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதில் 6-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்பகுதியில் 3-வது நாளாக நேற்றும் தேடுதல் பணி தொடர்ந்தது.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில், “கண்டி வனப்பகுதியில் கைது செய்யப்பட்டவர் புல்வாமா மாவட்டம் ஆரிகம் பகுதியைச் சேர்ந்த இஷ்பக் அகமது வாணி என தெரியவந்துள்ளது. தீவிரவாத அமைப்பச் சேர்ந்த அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 5 முதல் 6 கிலோ ஐஇடி வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் மிகப் பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என கூறப்பட்டுள்ளது.