மும்பை: தேசியவாத காங்கிரஸின் (என்சிபி) புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக அந்த கட்சியின் உயர்நிலைக் குழு இன்று கூடுகிறது.
கடந்த 1999-ம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அப்போது முதல் 24 ஆண்டுகள் வரை கட்சியின் தலைவராக சரத் பவார் செயல்பட்டார். இந்த சூழலில் கட்சியை கைப்பற்றுவதில் அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கும், அண்ணன் மகன் அஜித் பவாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 40 எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் பாஜகவில் இணைய இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதனால் தேசியவாத காங்கிரஸ் உடையும் சூழல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சரத் பவார், அஜித் பவாருக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதன் அடிப்படையில் பாஜகவில் இணையும் முடிவை அஜித் பவார் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த 2-ம் தேதி சரத் பவார் அறிவித்தார்.
தேசியவாத காங்கிரஸின் புதிய தலைவரை தேர்வு செய்ய பிரபுல் படேல், சுனில் தாட்கரே, கே.கே.சர்மா, பி.சி.சாக்கோ, அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலே, சாகன் புஜ்பால், திலீப் பாட்டீல், அனில் தேஷ்முக், ராஜேஷ் டோபி, ஜிதேந்திர அத்வாத், ஹாசன் முஷ்ரிப், தனஞ்ஜெய் முண்டே, ஜெய்தேவ் கெய்க்வாட் ஆகிய 15 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆலோசனை நடத்தி கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி தேசியவாத காங்கிரஸின் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக கட்சியின் உயர்நிலைக் குழு இன்று கூடுகிறது. இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியல் மட்டுமன்றி தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதனிடையே கட்சித் தலைவர் பதவியில் சரத் பவார் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் மும்பையில் உள்ள சரத் பவாரின் வீட்டின் முன்பு நேற்று குவிந்தனர். அவர்கள் மத்தியில் சரத் பவார் பேசும்போது, “தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கிறேன். புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக கட்சியின் உயர்நிலைக் குழு வெள்ளிக்கிழமை கூடி முடிவு எடுக்க உள்ளது. அந்த குழு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வேன்" என்றார்.