இந்தியா

அதிகாரத்தைப் பிடிக்க பொய் வாக்குறுதிகளை அளித்தவர் மோடி: ராஜ் தாக்கரே பேட்டி

அலோக் தேஷ்பாண்டே

சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே பிரதமர் மோடி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘பாஜக தகிடுதத்தங்கள்’ என்று நடப்பு மத்திய அரசின் ஆட்சியை வர்ணித்த ராஜ்தாக்கரே மத்திய அரசின் இந்தித் திணிப்பை கடுமையாக எதிர்த்ததோடு, தென்மாநிலங்கள் ஹிந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடுவதைப் பாராட்டினார்.

மேலும் தாவூத் இப்ராஹிம் பற்றிய திடுக்கிடும் தகவல் ஒன்றையும் பரிமாறிக் கொண்டார்.

கேள்வி: தாவூத் இப்ராஹிம் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று விரும்புவதாகவும் மத்திய அரசுடன் அவர் இது குறித்து பேசி வருவதாகவும் நீங்கள் கூறியுள்ளீர்கள். உங்களுடைய இந்த கோரலுக்கு என்ன ஆதாரம்?

ஒன்றுமில்லாததை நான் கூறவில்லை. பிரதமர் மோடி இப்படிப்பட்ட தகிடுதத்தங்களை தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகச் செய்து வருகிறார். அவர் ஜப்பான் பிரதமரை அழைத்து குஜராத்தில் புல்லட் ரயில் திட்டத்தை தொடங்குகிறார், குஜராத் தேர்தல்களுக்காகவே இதனைச் செய்தார். எனக்குக் கிடைத்த தகவலின் படி தாவூத் இப்ராஹிம்தான் ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளார். இப்போது மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நான் எங்கிருந்து இந்தத் தகவலைப் பெற்றேன் என்று கேட்காதீர்கள், நான் அதைக் கூறுவேன் என்றும் எதிர்பார்க்காதீர்கள். மிகப்பெரிய திட்டம் ஒன்றின் ஒரு அங்கம்தான் தாவூத். பாகிஸ்தானுக்கு எதிராக போர் செய்யக் கூட தயங்கமாட்டார்கள். அல்லது மதக்கலவரங்களைக் கூட தூண்டலாம். தேர்தல்களில் வெற்றி பெற அவர்கள் கையில் வேறு உபாயங்கள் என்ன இருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?

தேர்தல்களில் வெற்றி பெறத்தான். பின் ஏன்? இந்திய மக்கள் பல முறை உணர்ச்சிப்பூர்வமான விவகாரங்களை முன்வைத்து வாக்க்களித்துள்ளனர். நான் உங்களையே கேட்கிறேன், டோக்லாமில் என்ன நடந்தது? இதன் விளைவுகள் என்ன? ஏன் அது அவ்வாறு நடந்தது என்று யாருக்காவது தெரியுமா? இதில் கவனத்தைத் திசைத்திருப்பி இன்னொரு புறம் நினைத்ததைச் செய்து கொள்ளலாம். ஊடகங்களும் இதில் சுறுசுறுப்பாக உள்ளன. சொல்லாடல் மாறுகிறது. பாஜகவுக்கு வாக்கு வங்கியை அதிகரிக்க இதைத்தவிர வேறு ஏதாவது இருக்கிறதா என்ன? ஒன்றுமேயில்லை.

2013 மோடிக்குச் சாதகமாகப் பேசினீர்கள், 2017-ல் என்ன தவறு நடந்து விட்டது, நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு?

விஷயங்கள் தவறாகப் போகும்போது நான் பேசுகிறேன். நான் ஊடகங்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்கிறேன். ரிப்போர்ட்டர்களும், எடிட்டர்களும் இந்த அரசுக்கு எதிராகப் பேசுகிறார்களா? அவர்களால் முடியாது. காரணம் பத்திரிகை உரிமையாளர்களின் நிதி விவரங்களை அரசுத் தன் கையில் வைத்துள்ளது. இந்த அரசை விமர்சிக்க, அம்பலப்படுத்த விருப்பம் கொண்ட எடிட்டர்களையும் ரிப்போர்ட்டர்களையும் நான் அறிவேன். ஆனால் அவர்களால் முடியாது. நான் மோடியை தொலைநோக்குப் பார்வை கொண்டவராக முன்பு நினைத்தேன். ஆனால் இப்போது அவர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் ஒரு ஈவண்ட் மேனேஜராகவே தெரிகிறார். யோகாவாகட்டும், தூய்மை இந்தியாவாகட்டும், மேக் இன் இந்தியாவாகட்டும். அரசு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நிர்வகிக்கும் ஒரு நிறுவனமாகவே செயல்படுகிறது.

மோடிக்கு நீங்கள் அளித்த ஆதரவு தவறு என்று கருதுகிறீர்கள் இல்லையா?

நான் அவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த போது அவர் குஜராஜ் முதல்வராக இருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் நேர் எதிராகச் செயல்பட்டார். பிரதமர் ஆவதற்கு முன்பாக ஜிஎஸ்டி-யை எதிர்த்தார், ஆதாரை எதிர்த்தார். ஆனால் தற்போது ஜிஎஸ்டி, ஆதாரை திணித்துள்ளார். கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியனின் பாக்கெட்டிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று கூறியது தேர்தலுக்காகக் கூறப்பட்ட ஒன்று. பதவியைப் பிடிக்க மோடி வாக்காளர்களிடம் பொய்களைக் கூறியுள்ளார் என்று ஒவ்வொருவரும் உணரும்படியாகவே உள்ளது. ஆனால் இப்போது இதனை வெட்கமில்லாமல் ஒப்புக் கொள்கின்றனர். பணமதிப்பு நீக்கம் கறுப்புப் பணத்தை ஒழிக்க என்று கூறப்பட்டது, ஆனால் 99% பணம் வங்கிக்கு வந்து விட்டது, எங்கே கறுப்புப் பணம்? ஊழலும் பயங்கரவாதமும் நின்று விட்டதா? எந்த கறுப்புப் பண பதுக்கல்காரர் சிறைக்குச் சென்றார்? பாஜக ஊழலுக்கு எதிரானது என்றால், தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர்கள் செலவிட்ட பணம் எங்கிருந்து வந்தது? பாஜகவினர் சிலர் பணத்துடன் கைது செய்யப்பட்டனர், ஆனால் அது பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டன. விஷயம் என்னவெனில் இவர்கள் உண்மையான முகம் தெரியவர காலம் பிடிக்கும். நான் இப்போது கூறுகிறேன், மற்றவர்கள் இன்னும் சிறிது காலம் குறித்து இது பற்றி பேசுவார்கள். நான் மோடியை ஒரு தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை, அவரது கொள்கை மீதுதான் என் எதிர்ப்பு.

ஆனால்..மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனரே?

வாக்குகள் பற்றி பேசினால், இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் ஒரு பெரிய விவகாரமாகும். பாஜக எப்போதும் இப்படி வாக்குகள் பெற்றதில்லை. எங்கிருந்து இந்த வாக்காளர்கள் வந்தனர்? ஒருமுறை அலை அடித்தது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அது எப்படி நிரந்தரமாக இருக்கும்? வாக்குச்சீட்டு முறையில் யாருக்க்லு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் பார்க்கலாம். ஆனால் இந்த மின்னணு வாக்கு எந்திரம் என்ன செய்கிறது? பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். நிச்சயம் ஏதாவது நல்ல தீர்ப்பு கிட்டும்.

SCROLL FOR NEXT