புதுடெல்லி: "டெல்லி காவல் துறையினரால் துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இந்திய அரசு தங்களுக்கு வழங்கிய விருதுகளால் எந்த பயனும் இல்லை" என்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 10 நாட்களைக் கடந்து நடந்து வரும் இந்தப் போராடத்தில் புதன்கிழமை இரவு சில மல்யுத்த வீரர்கள் மடக்கு கட்டில்களை போராட்ட களத்துக்கு கொண்டுவர முயன்றபோது டெல்லி போலீசாருக்கும், வீரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், குடிபோதையில் இருந்த போலீஸ் ஒருவர், வீராங்கனைகனைகளிடம் தவறாக நடக்கமுயன்றார் என்று குற்றம்சாட்டினர்.
பதக்கங்களை திருப்பிக் கொடுப்போம்: இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் வியாழக்கிழமை ஜந்தர் மந்தரில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தங்களின் பதக்கங்கள், விருதுகளை திருப்பித் தரப்போவதாக தெரிவித்தனர். இது குறித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா கூறுகையில் "அவர்கள் (போலீஸார்) எங்களிடம் தவறாக நடக்கும்போது இந்த வீரர்கள் எல்லாம் பத்மஸ்ரீ பட்டம் வாங்கியவர்கள் என்று பார்க்கத் தோன்றவில்லையா? இது எனக்கு மட்டும் இல்லை. சாக்ஷியும் அங்கே இருந்தார். மல்யுத்த வீரர்களை நீங்கள் இப்படித்தான் நடத்துவீர்கள் என்றால், இந்தப் பதங்கங்கள் விருதுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இவற்றை இந்திய அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, நாங்கள் ஓர் எளிய வாழ்க்கையை வாழ்ந்து கொள்கிறோம்" என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் புனியாவிடம் நீங்கள் சர்வதேச அரங்கில் வாங்கிய பதக்கங்கள், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விருதுகளில் எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்டார். இதற்கு இடைமறித்த பதிலளித்த வினேஷ் போகத், "எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஏற்கெனவே எங்களை அதிகமாக அசிங்கப்படுத்திவிட்டீர்கள். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை" என்று தெரிவித்தார்.
வாழ்க்கையை பணயம் வைத்துள்ளோம்: இந்தப் போராட்டம் அரசியல் கட்சிகளால் நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு, கூப்பிய கரங்களுடன் பதில் அளித்த வினேஷ் போகத், "கேளுங்கள்... இது அரசியல். பிரதமரை எங்களுடன் பேசச் சொல்லுங்கள். உள்துறை அமைச்சரை எங்களை அழைத்து பேசச் சொல்லுங்கள். எங்களுக்கு நீதி வழங்கச் சொல்லுங்கள். நாங்கள் எங்களின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கையை பணயம் வைத்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம்" என்றார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டத்திற்கு பல எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தனது கட்சி எம்எல்ஏகள், கவுன்சிலர்கள், கட்சி உறுப்பினர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
மகளிர் ஆணையத்தின் தலைவர் சந்திப்பு: இதற்கிடையில், டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் வியாழக்கிழமை ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் வீரர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக, டெல்லி போலீஸார் தன்னை வீராங்கனைகளை சந்திக்கவிடாமல் தடுத்தனர் என்று குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், தான் அரசியலமைப்பு சார்ந்த பதவி ஒன்றை வகிப்பதாகவும், தான் போராட்டம் நடத்தும் வீரர்களை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவிப்பது பதிவாகியிருந்தது.
இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள டெல்லி போலீஸ் டிசிபி, "டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர், போலீஸ் அதிகாரி ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். உடனடியாக அவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது போராட்டக் களத்தில் உள்ளார். தனி மனிதர்கள் யாரும் ஜந்தர் மந்தர் செல்ல தடையில்லை" என்று தெரிவித்திருந்தார்.
ஸ்வாதி மாலிவால் பின்னர் இந்தியில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் வீராங்கனைகளுடன் இருக்கிறேன். நேற்றிரவு சில போலீஸார் அவர்களிடம் தவறாக நடக்க முயன்றும் அவர்களைத் தாக்கியும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம் எழுத்துபூர்வமாக புகார் பெற்றபின்னர், டெல்லி மகளிர் ஆணையம் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.