சென்னை: நியூயார்க்கில் நடந்த சம்பவம் இந்தியாவில் நடந்து இருந்தால் போலீஸாரின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ‘இந்து தமிழ் திசை’-யிடம் கூறியதாவது:
பொதுவாக ஒரு கொலைக்கான காரணத்தை முதலில் அலசி ஆராய வேண்டும். அந்த கொலை திட்டமிட்டு, கொலை செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் நடந்ததா அல்லது ஏதேச்சையாக, தற்காப்புக்காக அல்லது பிறரைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்துடன் நடந்ததா என்பதைப் பொருத்தே குற்றம் தீர்மானிக்கப்படும்.
இந்திய சட்டத்தில், கொலை நடந்து இருந்தாலும் கூட குற்ற எண்ணம் இல்லாத மன்னிக்கக்கூடிய குற்றமாக இருந்தால் அதற்கு கொலை குற்றத்துக்கான தண்டனை விதிக்கப்படாது. நியூயார்க்கில் ஓடும் ரயிலில் சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்த 30 வயது நபரின் கழுத்தை 24 வயதான அந்த இளைஞர் 15 நிமிடங்களுக்கு மேலாக விடாப்பிடியாக இறுக்கியதால் அவர் மூச்சுத்திணறி இறந்துள்ளார். அந்த நபர் இறந்து விடுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. நடந்த சம்பவத்தை ஊகித்துக்கொண்ட நியூயார்க் போலீஸாரும் அந்த இளைஞரை அப்போதே விடுவித்துள்ளனர்.
இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்றாலும் அது பொதுவானது அல்ல. பணபலம், அதிகாரம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு மாதிரியான வினையையும், வசதியில்லாத ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிர்வினையையும் ஆற்றி விடுகிறது. பொதுவாக போலீஸார் எந்த குற்ற சம்பவமாக இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தால் குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம் பிரிவு 43 ஏ-ல் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களின்படி ‘புகார் மீது விசாரணை’ நடத்தி அதன் பிறகே ஒருவரை கைது செய்ய வேண்டும்.
அப்படி முறைப்படி கைது செய்யப்படவில்லை என்றால் கைதான நபரை உடனடியாக பிணையில் விடுவிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்தியாவில் குற்றத்தை சீர் தூக்கிப்பார்த்து போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. அனைத்து குற்ற சம்பவங்களையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர் என்பதே எனது குற்றச்சாட்டு. தவிர ‘மனித கவுரவத்துக்கான குறியீடு’ உள்ள நாடுகளில் இந்தியாவும் இல்லை, அமெரிக்காவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.