புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் 1992-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர் பியாந்த் சிங். சண்டிகரில் உள்ள தலைமை செயலகத்தில் 1995-ல்
நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் பியாந்த் சிங் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் மேலும் 16 பேர் இறந்தனர்.
இதில் பாபர் கல்சா இன்டர்நேஷனல் காலீஸ்தான் அமைப்பைச் சேர்ந்த திலாவர் சிங் என்பவர் மனித வெடிகுண்டு தீவிரவாதியாக செயல்பட்டது தெரிய வந்தது.
இந்த படுகொலையில் மூளையாக செயல்பட்டவர் முன்னாள் போலீஸ்காரர் பல்வந்த் சிங் ராஜோனா. இவருக்கு சண்டிகர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பல்வந்த் சிங், மரண தண்டனையை, ஆயுளாக குறைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பல்வந்த் சிங் ராஜோனா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி, கூடுதல் சொலிசிடர் ஜெனரல் நட்ராஜ் ஆகியோர் வாதங்களை கேட்டு தீர்ப்பை கடந்த மார்ச் 2-ம் தேதி ஒத்திவைத்தது.
இந்நிலையில் நீதிபதிகள் பி.ஆர் கவாய், விக்ரம்நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு மரண தண்டனையை, ஆயுளாக குறைக்க முடியாது’’ என்று நேற்று தீர்ப்பளித்தனர்.