புதுடெல்லி: பிரதமர் மோடி, வானொலி மூலம் நாட்டு மக்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும், மனதின் குரல் நிகழ்ச்சி கடந்த வாரம் 100-வது அத்தியாயத்தை நிறைவு செய்தது. இதுவரை ஒலிபரப்பான உரைகளில் பிரதமர் மோடி, தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி தொடர்பாக அதிகம் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பழமையான தமிழ் மொழி நமது நாட்டில் தோன்றியது என்பதை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைகொள்ள வேண்டும் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். தமிழ் மக்களின் பங்களிப்புகள் தொடர்பாக பல உதாரணங்களைப் பகிர்ந்துள்ளார்.
வேலூரில் நாக நதியை மீட்டெடுக்க 20 ஆயிரம் பெண்கள் இணைந்து செயல்பட்டது, தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் தாக்கத்தைக் குறைத்து மண்வளத்தைக் காக்க பனைமரங்கள் நடப்படுவது போன்ற கூட்டு முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சீரமைக்க தாராளமாக பணம் வழங்கிய திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாயம்மாள் குறித்தும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
திருக்குறளின் உலகளாவிய புகழ் தொடர்பாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சி மூலம், தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழியை தொடர்ந்து ஊக்குவித்து அதன் செழுமையை பிரதமர் மோடி வெளிப்படுத்தி வருகிறார்.