ஐந்து மாநில ஆளுநர்களுக்கான பெயர்ப் பட்டியலை பிரதமர் நரேந்திர மோடி இறுதி செய்துள்ளார். அதன்படி உத்தரப் பிரதேசம், கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக் உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார்.
மேலும் உத்தரப் பிரதேச பாஜகவைச் சேர்ந்த கேசரி நாத் திரிபாதி, டெல்லியைச் சேர்ந்த வி.கே.மல்ஹோத்ரா, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கைலாஷ் ஜோஷி, பஞ்சாபைச் சேர்ந்த பலராம் தாஸ் தாண்டன் ஆகியோரும் ஆளுநர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
அவர்கள் எந்த மாநில ஆளுநர்களாக நியமிக்கப்படுவார் கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. வெகுவிரைவில் இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பிப்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆட்சியில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்ட பி.எல்.ஜோஷி (உத்தரப் பிரதேசம்), எம்.கே.நாராயணன் (மேற்கு வங்கம்), சேகர் தத் (சத்தீஸ்கர்), அஸ்வினி குமார் (நாகாலாந்து), பி.வி.வாஞ்சூ (கோவா) ஆகியோர் அண்மையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
எச்.ஆர்.பரத்வாஜ் (கர்நாடகம்), தேவானந்த் கொன்வர் (திரிபுரா) ஆகியோர் கடந்த மாதம் ஓய்வு பெற்றனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா சில நாட்களுக்கு முன்பு பதவி நீக்கம் செய்யப்பட்டார். குஜராத் மாநில ஆளுநராக இருந்த கமலா பெனிவால் அண்மையில் மிசோரம் ஆளுநராக மாற்றப் பட்டார்.