நாடு தழுவிய அளவில் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் பலனடையும் வகையில் 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார்.படம்: பிடிஐ 
இந்தியா

'இந்திய வானொலி துறையில் புரட்சியை ஏற்படுத்தும்' - 91 எஃப்எம் டிரான்ஸ்மிட்டர்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் வானொலி சேவையை விரிவாக்கம் செய்யஏதுவாக 91 எஃப்எம் டிரான்ஸ்மிட் டர்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:

அகில இந்திய வானொலியின்91 பண்பலை (எஃப்எம்) டிரான்ஸ்மிட்டர்கள் தொடங்கப் பட்டிருப்பது 85 மாவட்டங்கள் மற்றும் நாட்டின் 2 கோடி மக் களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசாகும். குறிப்பாக, வடகிழக்கு பகுதி மக்கள் இந்த விரிவாக்க சேவையினால் பெரிதும் பலனடைவர்.

மன்கிபாத் மூலமாக வானொலி யின் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்றவகையில் நானும் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டு மக்களுடன் உணர்வுப்பூர்வமாக உரையாடுவது வானொலி மூல மாக மட்டுமே முடியும். தூய்மை இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டதற்கு அதன் பங்கு முக்கியமானது.

இதுவரை வானொலி வசதி மறுக்கப்பட்ட மக்களுக்கு முன் னுரிமை அளிக்கும் வகையில் அரசின் கொள்கைகளை முன் னெடுத்து செல்வதிலும், முக்கிய தகவல்களை உரிய நேரத்தில் தருவதிலும் இந்த 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்களின் தொடக்கம் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

தொழில்நுட்ப வசதிகளை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்ப்பதை அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் வானொலிக்கு புதிய நேயர்களை ஈர்த்துள்ளதோடு, புதிய சிந்தனைகளையும் புகுத்தியுள்ளது. போட்காஸ்ட், இணையவழி பண்பலை சேவை களின் வாயிலாக வானொலி புத்துயிர் பெற்றிருக்கிறது.

அதேபோன்று, உலகம் பற்றிய நிகழ் நேர தகவல்களை கோடிக்கணக்கான கிராமப்புற மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அளிக்கும் நாட்டின் மிகப்பெரிய டிடிஹெச் தளமான தூர்தர்ஷன் இலவச டிஷ் சேவை, 4 கோடியே 30 லட்சம் வீடுகளை சென்றடைந்துள்ளது.

பல தசாப்தங்களாக வசதி மறுக்கப்பட்ட பிரிவினருக்கு, கல்வியும், பொழுதுபோக்கும் சென்றடைவதை தற்போதைய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் தரமான தகவல்களை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பன்முகத் தன்மைவாய்ந்த மொழியியல் பரிமாணங்கள் கொண்ட இந்தியாவில் பண்பலை ஒலிபரப்பு அனைத்து மொழிகளிலும், குறிப்பாக 27 கிளை மொழிகள் உள்ள பிராந்தியங்களில் ஒலிபரப்பு செய்யப்படும்.

கலாச்சார இணைப்பையும், அறிவுசார் இணைப்பையும் அரசு வலுப்படுத்தி வருகிறது. 140 கோடி மக்களையும், நாட்டையும் இணைப்பதுதான் வானொலி போன்ற அனைத்து தகவல் தொடர்பு ஊடகங்களின் தொலைநோக்குப் பார்வையாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT