கட்சியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, திரிணமூல் எம்.பி. தபஸ் பால், தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார்.
முன்னதாக, திரிணமூல் எம்.பி. தபஸ் பால் தனது கண்டனத்துக்குரிய கருத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியிருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்களது கட்சித் தொண்டர்களை தொந்தரவு செய்தால் அவர்களது வீட்டுப் பெண்களை பலாத்காரம் செய்ய உத்தரவிடுவேன் என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தபஸ் பால் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவரது மனைவி நந்தினி பால் கணவர் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
திரிணமூல் பொதுச் செயலர் முகுல் ராய் இது பற்றிக் கூறுகையில், “அவரது கருத்து கண்டனத்திற்குரியது. கட்சி அதனை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது, கட்சி அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது மேலும் அவரை எச்சரித்துள்ளது. அவர் மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கட்சி வலியுறுத்துகிறது” என்றார்.
முன்னதாக, மாநில கல்வித் துறை அமைச்சரும், திரிணமூல் மூத்தத் தலைவருமான பார்த்தா சாட்டர்ஜி, “இத்தகைய கருத்துக்கள் கடும் கண்டனத்திற்குரியது, எங்கள் கட்சித் தலைவர் இது பற்றி சொல்லொணா வருத்தம் அடைந்துள்ளார், கட்சி இது போன்ற நடத்தையை ஒருக்காலும் அனுமதிக்காது” என்றார்.
தபஸ் பால் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது நாளை நடைபெறும் திரிணமூல் எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்ற நிலையில் அவர் தற்போது நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார்.