புதுடெல்லி: ‘‘பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்முறைகளில், தற்போது தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், குற்றம் மற்றும் சிவில்வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் மாவட்ட நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயமாக்க வேண்டும்’’ எனஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் வழக்கில் 28 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கிய ஒருவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தது. அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தஅப்பீல் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும்சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றச்சாட்டு ஆவணங்களை விசாரணை நீதிமன்றத்தால் கண்டுபிடித்து தாக்கல் செய்ய முடியவில்லை. இதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்துசெய்து குற்றவாளியை உச்சநீதிமன்றம் விடுவிக்க நேரிட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
நீதிமன்ற ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை(எஸ்ஓபி) உச்ச நீதிமன்றத்தின் மின்னணு - குழு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி வெளியிட்டுள்ளது. நீதிமன்ற நடைமுறைகள் சுமுகமாக நடக்க அனைத்து ஆவணங்களும் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். இதை உறுதி செய்யும் விதத்தில் வலுவான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விஷயத்தில் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆகையால் மாவட்ட நீதிமன்றங்களில் அனைத்து குற்றம்மற்றும் சிவில் வழக்குகளின் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதை உயர்நீதிமன்றங்களின் தலைமை பதிவாளர் உறுதி செய்ய வேண்டும். ஆவணங்கள் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்டமாவட்ட நீதிபதி உறுதி செய்யவேண்டும். தொடர்ந்து மேம்படுத்தப்படும் டிஜிட்டல் ஆவணங்களை பராமரிக்க வேண்டும். அவற்றை தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்போது உயர்நீதிமன்றங்களுக்கு அனுப்ப வேண்டும்.
நியாயமான சட்ட நடைமுறையில், ஒருவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் அடங்கியுள்ளது. அதற்கான ஆவணங்கள் மேல்முறையீடு நீதிமன்றத்திடம் இருந்தால்தான், நியாயமான தீர்ப்பு வழங்க முடியும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.