இந்தியா

'ஆபரேஷன் காவேரி' | சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் நாடு திரும்பினர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் புதுடெல்லி வந்தடைந்தனர்.

சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவத் தளபதி அப்தல் ஃபதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையாக ஆர்எஸ்எஃப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. அங்கு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக கடந்த 21ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘சூடானில் நிலவரம் மிகவும் பதற்றமாக உள்ளது. இந்திய சமூகத்தின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதில் கவனம் செலுத்திவருகிறோம். விரைவில் அங்கிருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக கப்பல்களையும் விமானங்களையும் மத்திய அரசு அனுப்பி உள்ளது. சூடானின் துறைமுக நகரான போர்ட் சூடானில் இருந்து சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய விமானப் படை விமானங்கள் மூலம் இதுவரை 4 விமானங்களில் இந்தியர்கள் போர்ட் சூடானில் இருந்து ஜெட்டாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 360 பேர் கொண்ட முதல் குழு, சவூதி அரேபிய விமானம் மூலம் நேற்றிவு புதுடெல்லி வந்தடைந்தனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் டெல்லி வந்தடைந்தது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை அங்கிருந்து மீட்பதற்காக கடந்த ஆண்டு மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் திட்டத்தை செயல்படுத்தியது. தற்போது, சூடானில் இருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான திட்டத்திற்கு ஆபரேஷன் காவேரி என பெயரிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT