திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் https://tirupatibalaji.ap.gov.in/ என்கிற இணைய தளத்தின் மூலம் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது.
மேலும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், பக்தர்கள் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு, இ-உண்டி, நன்கொடைகள் என அனைத்து சேவைகளுக்கும் இந்த இணைய தளத்தை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், TTDevasthanams என்கிற மொபைல் செயலியையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலமாகவும் பக்தர்கள் டிக்கெட், அறைகள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இந்நிலையில் தேவஸ்தான இணைய தளத்தை போலவே பல போலி இணைய தளங்கள் இணையத்தில் உலா வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவஸ்தானத்தின் ஐ.டி. பிரிவு கண்டறிந்து திருமலை போலீஸாருக்கு புகார் அளித்தது.
அதன்படி 41 போலி இணைய தளங்களை தடை செய்யவும், அவற்றின் மீது கிரிமினல் வழக்குகள் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.