ரோஹிங்கியா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்று நாட்டினுள் அனுமதிக்கும் முன்னர் தேச பாதுகாப்பை கவனத்தில் கொண்டு முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அறிவுறுத்தியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் சார்பில் வருடாந்திர தசரா கொண்டாட்டம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மோகன் பாகவத், "வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் இதுவரை நாம் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகிறோம். இந்நிலையில், ரோஹிங்கிய முஸ்லிம்கள் இப்போது ஊடுருவுகின்றனர். ரோஹிங்கியாக்களுக்கு அடைக்கலம் கொடுப்பது நமக்கு நெருக்கடியைத் தரும். தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே, ரோஹிங்கியா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்று நாட்டினுள் அனுமதிக்கும் முன்னர் தேச பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மத்திய அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும்" என்றார்.
சிறு, நடுத்தர தொழில்துறையினர் பாதுகாப்பு அவசியம்..
அண்மையில், இந்தியப் பொருளாதாரத்தின் மந்தநிலை குறித்து யஷ்வந்த் சின்ஹா கூறியது பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பொருளாதார நிலவரம் குறித்து மோகன் பகவத், "சிறு, நடுத்தர மற்றும் சுயதொழில் முனைவோர் நலன்களை அரசு உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், அவர்களே இந்தியப் பொருளாதாரத்துக்கு பெருமளவில் பங்களிப்பு செய்கின்றனர்" எனக் கூறினார்.
மதங்கள் கடந்தது பசு பாதுகாப்பு...
பசு பாதுகாப்பு குறித்து பேசிய பாகவத், "பசு பாதுகாப்பு மதங்கள் கடந்தது. எப்படி பசு பாதுகாப்புக்காக பஜ்ரங் தல தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார்களோ அதேபோல் நிறைய முஸ்லிம்களும் பசு பாதுகாப்புக்காக தங்களை உயிரை இழந்துள்ளனர். பசு பாதுகாவலர்களால் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதேவேளையில், பசு கடத்தல்காரர்களாலும் பலர் கொல்லப்படுகின்றனர் என்பதும் உண்மை" என்றார்.
இறுதியாக, நேற்று (செப்.29) மும்பை எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தனது இரங்கலைத் தெரிவித்து உரையை முடித்தார்.