இந்தியா

பணமதிப்பு நீக்கம் போலவே புல்லட் ரயில் திட்டமும் வீணானது: ப.சிதம்பரம் கருத்து

பிடிஐ

"பணமதிப்பு நீக்க நடவடிக்கை போலவே புல்லட் ரயில் திட்டமும் வீணானது. இத்திட்டம், ரயில் பாதுகாப்பு உள்ளிட்ட மற்ற திட்டங்களை நசுக்கிவிடும்" என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மும்பை எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர். இந்நிலையில் மோடியின் புல்லட் ரயில் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், "பணமதிப்பு நீக்க நடவடிக்கை போலவே புல்லட் ரயில் திட்டமும் வீணானது. இத்திட்டம், ரயில் பாதுகாப்பு உள்ளிட்ட மற்ற திட்டங்களை நசுக்கிவிடும். மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம், சாதாரண மக்களுக்கானது அல்ல. அது சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் பலம்பொருந்தியவர்களுக்கானது. புல்லட் ரயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி பணத்தைக் கொண்டு ரயில்வே துறை பயணிகள் பாதுகாப்பு சார்ந்த திட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம். பணமதிப்பு நீக்க நடவடிக்கைபோல் புல்லட் ரயில் திட்டம் பிற நன்மைகளை நசுக்கிவிடும்" எனக் கூறியுள்ளார்.

ஜப்பான் உதவியுடன் புல்லட் ரயில் திட்டம்..

ஜப்பான் உதவியுடன் நாட்டிலேயே முதன்முறையாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. 1லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கு ஜப்பான் 88 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி செய்கிறது. 0.1 சதவீதம் என்ற மிகவும் குறைவான வட்டியில் ஜப்பான் கடன் கொடுக்கிறது. இந்த கடன் தொகையை 50 ஆண்டுகளில் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT