காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு டெல்லியில் நேற்று விருது வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. படம்: பிடிஐ 
இந்தியா

காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்திக்கு விருது

செய்திப்பிரிவு

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பை ஏற்படுத்த ரூ.185 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியில் 275 ஊராட்சிகளில் 1,350 குக்கிராமங்களில் 100 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டன. இந்த மாவட்டத்தில் மொத்தம் 2,15,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1,16,000 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த 3 லட்சத்து 12 ஆயிரம் மீட்டர் பிரதான குடிநீர் குழாய்களும், 8 லட்சத்து 98 ஆயிரம் மீட்டர் அளவுக்கு நீர் விநியோகிக்கும் குழாய்களும் பொருத்தப்பட்டன.

இந்தத் திட்டத்துக்காக, 458 ஆழ்துளை கிணறுகள், 50 திறந்தவெளி கிணறுகள் அமைக்கப்பட்டன. 223 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டன. கடந்த அக்டோபர் மாதமே இதற்கான பணிகள் முடிக்கப்பட்டது.

மேலும் இந்த கிராமங்களில் தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தண்ணீரை பரிசோதனை செய்வதற்கான குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்தியதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு, டெல்லியில் நேற்று நடந்த சிவில் சர்வீஸஸ் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி விருது வழங்கி கவுரவித்தார்.

SCROLL FOR NEXT