பெங்களூரு: கர்நாடக தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் அணி வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பழனிசாமி அணி வேட்பாளர் அன்பரசன் மனு ஏற்கப்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. கடைசி நாளில் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பில் பெங்களூருவில் புலிகேசிநகர், காந்தி நகர், கோலார் தங்கவயல் ஆகிய 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதேபோல அதிமுகவின் பழனிசாமி அணியின் சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
அவசரமாக வேட்புமனு: இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் 3 வேட்பாளர்களும், பழனிசாமி அணி வேட்பாளரும் அவசர அவசரமாக வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுக்கள் மீது நேற்று தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். அதில் ஓபிஎஸ் அணியின் புலிகேசி நகர் தொகுதியின் வேட்பாளர் நெடுஞ்செழியனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். மனுவை சரியாக பூர்த்திசெய்யாததால் தள்ளுபடியானதாக தெரிவிக்கப்பட்டது. இதனால்ஓபிஎஸ் அணியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அன்பரசன் மனு ஏற்பு: அதே தொகுதியில் பழனிசாமி அணி வேட்பாளர் அன்பரசனின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஓபிஎஸ் அணியின் கோலார் தங்கவயல் வேட்பாளர் ஆனந்தகுமார், காந்தி நகர் வேட்பாளர்குமார் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்த தேர்தலில் பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதால், கர்நாடக மாநில செயலாளர் எஸ். டி. குமார் தலைமையிலான அணியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.