திருவனந்தபுரம்: கோக-கோலா தொழிற்சாலை தன் வசம் உள்ள 35 ஏக்கர் நிலத்தை மீண்டும் கேரள மாநில அரசிடம் ஒப்படைக்கவுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமாடா பகுதியில் கோக-கோலா நிறுவனத்தின் குளிர்பானம் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு, மாசு ஏற்படுத்துதல், நிலத்தடி நீரைச் சுரண்டுதல் போன்ற பிரச்சினைகளை எழுப்பி அங்கு அப்பகுதி மக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த கோக-கோலா தொழிற்சாலை மூடப்பட்டது.
ஆனாலும் தொழிற்சாலை அமைந்திருந்த இடமானது, கோக-கோலா நிறுவனத்திடமே இருந்தது. இந்நிலையில் அந்த இடத்தில் விவசாயி உற்பத்தி அமைப்பு, பண்ணை (எஃப்பிஓ) அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தையையும் கேரள அரசு தொடங்கியுள்ளது.
இதையடுத்து கோக-கோலா நிறுவனத்தின் வசமுள்ள 35 ஏக்கர் நிலத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையில் கேரள அரசு இறங்கியது.
இதுதொடர்பாக ஹிந்துஸ்தான் கோக-கோலா பெவரேஜஸ் நிறுவனத்துக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். இதையடுத்து அரசின் கடிதத்துக்கு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜுவான் பாப்லோ ரோட்ரிக்ஸ் டிராவேட்டோ, பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் 35 ஏக்கர் நிலத்தைஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அங்கு அமைந்துள்ள கட்டிடத்தையும் ஒப்படைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப உதவி
மேலும் விவசாயிகளுக்காக அங்கு மாதிரி பண்ணை அமைப் பதில் தொழில்நுட்ப உதவியை கேரள அரசுக்கு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேரள அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.