கவுதம் அதானி - சரத் பவார் 
இந்தியா

ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து ஜேபிசி விசாரணை கோரியுள்ள நிலையில் சரத் பவாருடன் கவுதம் அதானி சந்திப்பு!

செய்திப்பிரிவு

மும்பை: அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை கோரி வரும் நிலையில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.

அதானி குழுமம் பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியது.

இந்த நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையை விமர்சனம் செய்தும், கவுதம் அதானிக்கு ஆதரவாகவும் சரத் பவார் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால் அந்த விசாரணையின் முடிவுகள் சந்தேகத்துக்குரியதாகவே இருக்கும். எனவே, உச்சநீதிமன்ற குழு விசாரணை செய்தால்தான் உண்மை வெளிவரும் என பவார் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், தொழிலதிபர் கவுதம் அதானி நேற்று காலை தெற்கு மும்பை சில்வர் ஓக் பகுதியில் அமைந்துள்ள சரத் பவாரின் இல்லத்துக்கு சென்றார். சரத் பவார் உடனான அதானியின் சந்திப்பு இரண்டு மணி நேரம் வரை நீடித்ததாக தகலவறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT