இந்தியா

தினந்தோறும் தேசிய கீதம் ஒலிக்கும் தெலங்கானா கிராமம்; கேட்டவுடன் மரியாதை செலுத்தும் மக்கள்

தயாசங்கர்

தெலங்கானா மாவட்டம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தினந்தோறும் காலையில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு வருகிறது.

அப்போது சாலையில், வீட்டில் அல்லது பொது இடங்களில் என மக்கள் எங்கு இருந்தாலும் அந்த 52 விநாடிகள் அப்படியே நின்றுவிடுகின்றனர். தேசிய கீதம் சரியாக காலை 7.54 மணிக்கு ஒலிக்கிறது. அப்போது வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருந்தாலும் ஒரு நிமிடம் நின்றுவிட்டே செல்கின்றன.

அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் இருந்தே தேசிய கீதம் ஒலிக்கப்படுகிறது. இதற்கான கிராமத்தைச் சுற்றிலும் உள்ள சுமார் 16 இடங்களில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜம்மிகுண்டா ஆய்வாளர் பிரஷாந்த் ரெட்டி, ''தினமும் ஒரு நிமிடம் நின்று ஒரு மனிதர் தேசிய கீதம் பாடி வந்தால், நிச்சயம் நாட்டின் மீதான அக்கறையும், பொறுப்புணர்வும் உண்டாகும் வகையில் அவரின் மனநிலை மாற வாய்ப்பு உண்டு. இதன்மூலம் குற்றங்களின் எண்ணிக்கையும் குறையும்'' என்றார்.

தேசிய கீதம் பாடப்படுவதற்காக திட்டம் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று உருவானது. தினந்தோறும் முதலில் பழைய தெலுங்குப் படங்களில் இடம்பெற்ற தேசபக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. அதையடுத்து ஆய்வாளர் தேசிய கீதம் பாடத் தயாராக இருக்கும்படி பொது மக்களிடம் கூறுகிறார்.

காவல் நிலையத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்ட உடனே தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது.

இதுகுறித்து ஐடி பணியாளரான சாய் பிரியா, ''நாம் பொதுவாக பள்ளியில் படிக்கும்போது காலை பிரார்த்தனை கூட்டத்தின்போது மட்டுமே தேசிய கீதம் பாடினோம். அதற்குப் பிறகு சுதந்திர தினம், குடியரசு தினங்களில் அரிதாகப் பாடினோம். தற்போது தினந்தோறும் தேசிய கீதம் பாடப்படுவதன் மூலம் நாட்டுப்பற்று அதிகரிக்கிறது'' என்றார்.

SCROLL FOR NEXT