அதிகபட்ச தொலைதொடர்பு பாதுகாப்பு காரணங்களுக்காக மூத்த அதிகாரிகளுக்கு ரிலையன்ஸ் சிம் கார்டுகளுடன் 500 கூகிள் பிக்ஸல் போன்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்த தகவலை உயர் பதவியில் இருக்கும் அரசு அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) தெரிவித்தார்.
ஆன்டிராய்ட் இயங்குதளத்தில் செயல்படும் இந்த போன்களில் இணை செயலாளர் பதவிகளுக்கு மேலுள்ள அதிகாரிகளின் எண்கள் அனைத்தும் முன்பாகவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அதிகாரிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த போன்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதிக பாதுகாப்பு ஆர்ஏஎக்ஸ் சேவை
மத்திய அரசு பொதுவாக (ஆர்ஏஎக்ஸ்) என்ற 'பொருத்தப்பட்ட லேண்ட்லைன் பாதுகாப்பு தொலைதொடர்பு சேவையை' பயன்படுத்துவது வழக்கம்.
பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, பயன்படுத்தப்படும் ஆர்ஏஎக்ஸ் சேவைகளின் எண்ணிக்கை 1,300-ல் இருந்து 5,000 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த சேவை இருக்கும்போதே எதற்காக புதிய மொபைல் சேவைகள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அதிகாரி ஒருவர், ''ஆர்ஏஎக்ஸ் சேவையில் வரம்புகள் உள்ளன. ஆனால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள மொபைல் போன்களை கையில் எடுத்துச் செல்ல முடியும். அதிகாரி அலுவலகத்தில் இல்லாதபோதும், அவரை பாதுகாப்பு அம்சங்களோடு தொடர்பு கொள்ள முடியும்'' என்றார்.
முக்கிய துறைகளுக்கும் பாதுகாப்பான தொலைதொடர்பு வசதி?
நாட்டின் அதி முக்கியமான துறைகளான பாதுகாப்புத் துறை, தொலைதொடர்பு மற்றும் புலனாய்வுத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளிடையே உயர் பாதுகாப்பு அம்சங்களோடு கூடிய சேவையை ஏற்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.
இதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், மொபைல் போன்களோடு இமெயில் சேவையிலும் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.