இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியப் படைகளை ஒருபோதும் அனுப்பமாட்டோம்: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு இந்தியப் படைகள் அனுப்பப்படமாட்டாது என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் இந்தியா வந்துள்ளார். அவருடனான சந்திப்புக்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். அவர் இங்கு மூன்று நாள் சுறறுப்பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது நிர்மலா சீதாராமன், "ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளிலும் மருத்துவ உதவிகளை மேற்கொள்வதிலும் இந்தியா தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்ளும் அதேவேளையில் அந்நாட்டின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இந்தியப்படைகள் ஒருபோதும்  அங்கு அனுப்பப்படமாட்டாது" என்றார்.

ஆப்கானிஸ்தானுக்கு இந்திய தரப்பில் 3 பில்லியன் டாலர் நிதியுதவி ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கூடுதலாக பங்களிப்பு தரவேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் வலியுறுத்தியிருந்த நிலையில் இந்திய நிலைப்பாட்டை நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் பேசும்போது, "தீவிரவாதங்களுக்கு புகலிடம் அளிப்பவர்களை சகித்துக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்" என்றார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான கடல்சார் கூட்டுறவை அதிகரித்துக்கொள்வதற்கு இந்த சந்திப்பின்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT