திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் சூடானில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தலைநகர் கார்ட்டூமில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அகஸ்டின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மே மாதம் நாடு திரும்ப இருந்த நிலையில் வன்முறையில் அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் கூறியதாவது. சூடானில் அகஸ்டின் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய மனைவி மற்றும் மகள் பத்திரமாக உள்ளனர். அகஸ்டின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
சூடானில் சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக தலைநகர் காட்டூமின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.
சூடானில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது, ‘‘சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனால், இந்தியர்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம். அனைவரும் வீடுகளில் பத்திரமாக இருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தப்பட்டள்ளது.