மணிப்பூரில் இம்பாலில் நடைபெற்ற மிஸ் இந்தியா 2023 போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா (நடுவில்) முதலிடத்தைப் பிடித்து பட்டம் வென்றார். 2-ம் இடம் பிடித்த டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா, 3-ம் இடம் பிடித்த மணிப்பூரின் தூனோஜம் ஸ்ட்ரெலா லுவாங் ஆகியோர் உடன் உள்ளனர். படம்: பிடிஐ 
இந்தியா

மிஸ் இந்தியா பட்டம் வென்ற ராஜஸ்தான் இளம்பெண் - மிஸ் வேர்ல்டு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான நந்தினி குப்தா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.

மிஸ் இந்தியா-2023 போட்டி மணிப்பூரின் இம்பால் நகரில் நேற்று நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா (19) மிஸ் இந்தியா பட்டம் வென்றார். டெல்லியின் ஸ்ரேயா பூஞ்சா இரண்டாவது இடத்தையும், மணிப்பூரின் தூனோஜம் ஸ்ட்ரெலா லுவாங் மூன்றாவது இடத்தையும் மிஸ் இந்தியா போட்டியில் பிடித்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி குப்தா. வணிக மேலாண்மை பட்டப் படிப்பை படித்து வரும் இவர் சிறு வயது முதலே நிகழ்வுகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம்கொண்டவர். முன்னாள் உலகஅழகியான (2000) பிரியங்கா சோப்ராவைப் போல சாதனைகளை படைக்க வேண்டும் என மாடலிங் துறையில் நுழைந்த அவர்தற்போது மிஸ் இந்தியா பட்டத்தைவென்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் கைத்தறியை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் கைவினைகலைஞர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர் நந்தினி குப்தா.

மணிப்பூரில் நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முன்னாள் வெற்றியாளர்கள் கலந்து கொண்ட கண்கவர் அணிவகுப்பும் நடைபெற்றது. மிஸ் இந்தியா போட்டியில் நந்தினி குப்தா வெற்றி பெற்றுள்ளதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் 71வது மிஸ் வேர்ல்டு போட்டியில் இந்தியா சார்பில் அவர் பங்கேற்பார் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT