மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்ப்பூர் மாவட்டத்தில் சுற்றுச்சுவர் இடிந்து வீடுகளின் மீது விழுந்ததில், 7 குழந்தைகள் பலியானதாகவும், 9 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது
மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று (ஞாயிற்றுகிழமை) இரவு புர்ஹான்ப்பூர் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவின் சுற்றுச்சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், அந்தச் சுவரின் சுற்று வட்டாரத்தில் இருந்த வீடுகள் சில மண்ணில் புதைந்தன.
இதில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த குழந்தைகள் அனைவரும் ஒன்று முதல் 14 வயதுக்கு உட்ப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், இடிபாடுகளில் சிக்கிய 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தலா ரூ.5,000 வழங்க மத்தியப் பிரதேச அரசு புர்ஹான்ப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.