இந்தியா

முப்படைகளில் ஆள்தேர்வுக்கான அக்னி பாதை திட்டம் செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: முப்படைகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்வதற்காக மத்திய அரசு அறிமுகம் செய்த அக்னி பாதை திட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பான பொதுநல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ராணுவம், விமானப் படை, கடற்படைக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக ‘அக்னி பாதை’ என்ற பெயரில் புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. இதன்படி, 17-23 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் முப்படையில் சேரலாம். 4 ஆண்டு பணிக்கு பிறகு இவர்களில் 25 சதவீதம் பேர் திறமை அடிப்படையில் நிரந்தரம் செய்யப்படுவார்கள். மற்றவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இளைஞர்கள் மத்தியில் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனினும், எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர்.

அக்னி பாதை திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ‘அக்னி பாதை திட்டம் செல்லும்’ என்று கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. நாட்டு நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், முப்படைகளை வலிமையாக்கும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

இதை எதிர்த்து கோபால் கிரிஷன் மற்றும் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தரப்பில் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதுகுறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் அனைத்து கோணத்திலும் விசாரித்துவிட்டது. எனவே, உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை. அக்னி பாதை திட்டம் செல்லும். அது நியாயமற்ற திட்டம் அல்ல’ என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT