மும்பை: ஐஐடி-மும்பையில் தலித் மாணவர் தற்கொலை செய்து கொண்டு 2 மாதம் கடந்த நிலையில், சக மாணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி மும்பை ஐஐடியில் பி.டெக். முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கல்லூரி விடுதியின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால், தனது மகன் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக தர்ஷனின் பெற்றோர் தெரிவித்தனர். குறிப்பாக தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் கல்லூரியில் தனது மகனிடம் சக மாணவர்கள் பாகுபாடு காட்டியதாகவும் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த மும்பை போலீஸார் சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) பிப்ரவரி 28-ம் தேதி அமைத்தனர். இக்குழு,தர்ஷன் குடும்பத்தினர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் உட்பட 35 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்தது. இதனிடையே, கடந்த மார்ச் 3-ம் தேதி தர்ஷன் தங்கியிருந்த அறையிலிருந்து கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்பை போலீஸார் கைப்பற்றினர். அதில், “அர்மான் என்னை கொன்றுவிட்டார்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, கல்லூரி வளாகத்தில் சாதி ரீதியிலான பாகுபாடு நடைபெறவில்லை என மும்பை ஐஐடி சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு தெரிவித்தது. மதிப்பெண் குறைவு காரணமாக தர்ஷன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அக்குழு தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை எஸ்ஐடி அதிகாரிகளிடம் தடயவியல் துறை அதிகாரிகள் (கையெழுத்து நிபுணர்கள்) தங்கள் அறிக்கையை தாக்கல் செய்தனர். அந்த குறிப்பில் இடம்பெற்றிருந்த கையெழுத்தும் உயிரிழந்த தர்ஷனின் கையெழுத்தும் ஒத்துப்போவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தர்ஷனுடன் ஒரே அறையில் தங்கி படித்து வந்த அர்மான் இக்பால் காத்ரியை கைது செய்துள்ளதாக மும்பை போலீஸின் எஸ்ஐடி குழுவினர் தெரிவித்துள்ளனர். அர்மான் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட மதம் தொடர்பாக அர்மான் கூறிய கருத்து தொடர்பாக அவருக்கும் தர்ஷனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தர்ஷன் உயிரிழந்து 2 மாதம் கடந்த நிலையில், அர்மான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தர்ஷனின் தந்தை ரமேஷ்பாய் சோலங்கி கூறும்போது, “எனது மகன் மும்பை ஐஐடியில் சாதிரிதியிலான பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளான். எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும். எனது மகன் மீது சாதி ரீதியாக பாகுபாடு காட்டிய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.