மைசூரு: இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167-ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் புலிகள் பாதுகாப்பு திட்டம் (புராஜக்ட் டைகர்) கொண்டுவந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கர்நாடகா மாநிலம் மைசூருவில் இந்தத் திட்டத்தின் பொன்விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை வெளியிட்டார்.
மேலும், புராஜக்ட் டைகர் திட்டம் தொடங்கியதன் 50-ம் ஆண்டு விழாவையொட்டி நினைவு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது புலிகள் உள்பட 7 பெரிய வகை பூனை இனங்களை (புலி, சிங்கம், சிறுத்தை உட்பட) பாதுகாக்க அடுத்த 5 ஆண்டு திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது. நமது நாட்டில் 2010-ம் ஆண்டுகணக்கெடுப்பின்படி 1,706 புலிகள் இருந்தன. இது 2018-ல் 2,967 ஆக அதிகரித்தது. தற்போது நமது நாட்டில் மட்டும் 3,167 புலிகள் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதே நேரத்தில், உலக புலிகள் எண்ணிக்கையில் 75 சதவீத புலிகள் இந்தியாவில் வசிக்கின்றன.
புலிகளைப் பாதுகாப்போம் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது புலிகள் மட்டுமல்லாது மற்ற பெரிய பூனை இனங்களான ‘புலி-சிங்கம்' இனத்தையும் காக்க புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது.
புலிகளின் மற்றொரு இனமான சீட்டா, சிறுத்தை, ஜாகுவார், பனிச்சிறுத்தை, சிங்கங்கள், மலை சிங்கங்கள் என மொத்தம் 7 வகையான மிகப்பெரிய பூனை இனங்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றன.
இந்த 7 பெரிய வகை பூனை இனங்களை காக்க மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுக்கு திட்டம் வகுத்துள்ளது. ‘சர்வதேச பெரிய பூனைகள் கூட்டணி' என்பதுதான் இந்த திட்டமாகும். இதன் மூலம் மேற்குறிப்பிட்ட பெரிய பூனைகளை பாதுகாக்க குறைந்தபட்சம் ரூ.800 கோடி நிதி ஒதுக்கப்படும்.
நிதி ஒதுக்கீடுக்கு பின்னர் மீண்டும் இந்த உயிரினங்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளுக்குப் பிறகு மறு கணக்கீடு செய்யப்படும். இந்த கூட்டணியில் 97 நாடுகள் வரை சேர்ந்திருக்கும். இன்றளவிலும் இந்த உயிரினங்களை வேட்டையாடுவது, அழகுக்காக வளர்ப்பது ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே இதனை தடுக்க இந்த கூட்டணி ஒற்றுமையாக செயல்படும்.
நாட்டில் தற்போது சுமார் 30,000 யானைகள் வசிக்கின்றன. இதேபோல், இந்தியாவில் 3,000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. இது தவிர, ஆசிய சிங்கங்களின் மக்கள் தொகையை அதிகம் வைத்திருக்கும் ஒரே நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டில் 2015-ல் 525-ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020-ல் 675 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் புராஜக்ட் டைகர் திட்டம் வெற்றி பெற்றதால் இந்தியா மட்டுமே வெற்றி பெறவில்லை. மாறாக மொத்த உலகமே வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மைசூருக்கு அருகிலுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது அங்கு வனப்பாதுகாப்பில் ஈடுபடும் முன்களப் பணியாளர்கள், சுய உதவிக் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர் மைசூர் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு ஜீப்பில் அவர் பயணம் மேற்கொண்டார். அப்போது வனத்தில் சுற்றித் திரிந்த புலிகளை பைனாகுலர் மூலம் பிரதமர் மோடி ரசித்துப் பார்த்தார். மேலும் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுத்து ரசித்தார்.