மும்பை: அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை நடத்தினாலும் அதன் இறுதி அறிக்கை பாரபட்சம் உடையதாகவே இருக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் குறிவைக்கப்படுகிறது என்று அண்மையில் கருத்து தெரிவித்த அவர் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரிக்கை குறித்து தனது நிலைப்பாட்டை தற்போது தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றன. ஜேபிசியில் உள்ள 21 உறுப்பினர்களில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக உள்ளது. எஞ்சிய 6 பேர் மட்டுமே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இக்குழுவில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால் விசாரணை அறிக்கை பாரபட்சமானதாகவே இருக்கும்.
19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும், அதானி குழுமத்தில் ரூ.20,000 கோடிக்கு விளக்கம் கோரும் காங்கிரஸின் கோரிக்கைக்கு விடை கிடைப்பது சிரமம். இந்த விவகாரத்தில் முழு தகவல்களை திரட்டிய பிறகு விளக்கமான அறிக்கையை அளிப்பேன்.
அதேநேரம் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை இந்த விவகாரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.