புதுடெல்லி: ஈஸ்டர் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள சேக்ரட் ஹார்ட் தேவாலயத்திற்குச் சென்றார். அங்கே இருந்த பாதிரியார்களுக்கும் வழிபாட்டிற்காக திரண்டிருந்த மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழும் கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெற்ற தேர்தல் வெற்றிக்குப் பின்னர் சிறுபான்மையினர் மத்தியில் உள்ள பாஜகவின் செல்வாக்கு பற்றி அக்கட்சியினர் அடிக்கடி குறிப்பிட்டுவருகின்றனர். இந்நிலையில் ஈஸ்டர் தினத்தில் தேவாலயத்திற்குச் சென்று பிரதமர் வாழ்த்து தெரிவித்தது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக இன்று காலை, "ஈஸ்டர் திருநாளை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த சிறப்பு தினம் நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுவாக்க வேண்டும்" என்று வாழ்த்தியிருந்தார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், "ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு தினம் நமது சமுதாயத்தில் நல்லிணக்க உணர்வை வலுவாக்கட்டும். சமுதாயத்திற்கு சேவை செய்யவும், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கவும் இது மக்களை ஊக்குவிக்கட்டும். இந்த நாளில் கர்த்தராகிய கிறிஸ்துவின் பக்தி எண்ணங்களை நினைவுகூர்வோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.