புதுடெல்லி: நாட்டில் கரோனா தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று புதிதாக 6,050 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
இதில் அமைச்சர் மாண்டவியா பேசியபோது, ‘‘8 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லியில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது. கர்நாடகா, இமாச்சல பிரதேசம், தமிழகம், ஹரியாணாவில் 5-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் உள்ளது. எனவே மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை உறுதிசெய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் ஏப்.10, 11-ல் அவசரகால ஒத்திகை நடத்த வேண்டும்.
10 லட்சம் பேருக்கு 100 பரிசோதனைகள் என்ற தற்போதைய விகிதத்தில் இருந்து பரிசோதனை விகிதத்தை அதிகரிக்க வேண்டும்’’ என்றார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக இதில் பங்கேற்ற மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘தமிழகத்தில் தினமும் 4 ஆயிரம் பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் தினமும் 11 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.