புதுடெல்லி: கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுரா, உ.பி.யின் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்குள்ள பழமையான கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலின் ஒரு பகுதி 1669-70-ல், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டது. பிறகு அந்த பாதி நிலத்தில்அவுரங்கசீப், ஷாயி ஈத்கா மசூதியை கட்டியுள்ளார்.
சுதந்திரத்திற்கு பின் அந்த நிலத்தை மீட்க இந்துக்கள், முஸ்லிம்களுடன் ஒரு உடன்பாடு செய்து மசூதியை ஒட்டியபடி புதிதாக கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலை கட்டியுள்ளனர்.
இந்நிலையில், அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட மசூதி இடிக்கப்பட்டு அந்த நிலத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது, மத்திய அரசின் புனிதத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன்படியும், மதுராவின் இந்து-முஸ்லிம்களால் போடப்பட்ட ஒப்பந்தத்தினாலும் நீதிமன்றங்களால் ஏற்கப்படாமல் இருந்தது.
அயோத்தி ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதன் பிறகு கிருஷ்ண ஜென்ம பூமி குறித்த கோரிக்கை மீண்டும் எழுந்தது. மதுரா நீதிமன்றங்களில் பல்வேறு மனுக்கள் தொடுக்கப்பட்டன. இவற்றை மதுரா செஷன்ஸ் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன.
இதற்கிடையில், வாரணாசியின் கியான்வாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கள ஆய்வு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா தாக்கல் செய்த மனுவை ஏற்று, ஷாயி ஈத்கா மசூதியில் களஆய்வு நடத்த மதுரா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மாவட்ட நீதிமன்றம் ஏற்கவில்லை.
இருதரப்பு மனுதாரர்கள் இன்றி, அரசு நில ஆய்வாளரால் ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்தக் கள ஆய்வை பார்வையிட அனுமதிக்க கோரி அகில இந்திய இந்து மகாசபா வும் மனு அளித்தது.
இந்நிலையில், மசூதியின் களஆய்விற்கு தடை கேட்டு மதுராமுஸ்லிம்கள் தரப்பில் விரைவு நீதிமன்றத்தின் மூத்த சிவில் நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவை ஏற்ற மூத்த சிவில் நீதிபதி, கள ஆய்வு செய்வதற்கு தடை விதித்துள்ளார். இந்த வழக்கு 17-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.