புதுடெல்லி: முஸ்லிமான தனக்கு பாஜக ஆட்சியில் விருது வழங்கப்பட மாட்டாது என்ற தனது எண்ணத்தை பிரதமர் மோடி தவறு என நிரூபித்துவிட்டதாக பத்மஸ்ரீ விருது பெற்ற ரஷித் அகமது காத்ரி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு குடியரசு தினத்தின்போது 106 பேருக்கு குடியரசுத் தலைவரால் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவர்களில் 52 பேருக்கு பத்ம விருதுகள் குடியரசுத் தலைவரால் நேற்று வழங்கப்பட்டன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பிட்ரி கைவினை கலைஞரான ரஷித் அகமது காத்ரி, பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார். விருது பெறும் விழா நிறைவு பெற்றதும், விருதாளர்களுடன் பிரதமர் மோடி சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பிரதமருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விருதாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமருடன் கைகளைக் குலுக்கிய ரஷித் அகமது காத்ரி, ''எனக்கு பத்ம விருது கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இருந்தது. ஆனால், எனக்கு அப்போது விருது கிடைக்கவில்லை. உங்கள் ஆட்சி வந்ததும், பாஜக தலைமையிலான அரசு தனக்கு எந்த விருதையும் வழங்காது என எண்ணினேன். ஆனால், நான் நினைத்தது தவறு என நீங்கள் (பிரதமர் மோடி) நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதைக் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, புன்னகையுடன் அவருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஷித் அகமது காத்ரி, ''இந்த விருதைப் பெற நான் 10 ஆண்டுகள் முயற்சி செய்தேன். பாஜக ஆட்சிக்கு வந்ததும், முஸ்லிம்களுக்கு இந்த அரசு எந்த விருதையும் வழங்காது என எண்ணினேன். நான் நினைத்தது தவறு என பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார்'' என்று தெரிவித்தார்.